ஒரு உயிர் பிரிந்து விட்டபோது அல்லது ஒரு பொருளை நாம் தொலைத்த பின்பு தான் அதன் அருமை மனிதராகிய நமக்குப் புரிகிறது. அது போல் என்று நாம் எம் அன்னையைப் பிரிகிறோமோ அன்று தான் அன்னையின் அருமையை உணருகிறோம். எம்மைப் பெற்றதில் இருந்து நாம் பக்குவ நிலையை அடையும் வரை "கோழி அடை காப்பது" போல எம்மைக் காப்பாள். அவ்வாறு தாயவள் நமக்காக வாழுகின்ற போது அத் தாய்க்கு நாம் தெரியாமல் சில தவறுகளை செய்கிறோம் தெரிந்தே பல தவறுகளைச் செய்கிறோம். அப்பொழுது கூட பொறுமையாக விளங்கப்படுத்துகிறாள் அதில் உள்ள நன்மை தீமைகளை. சில நேரங்களில் காதில் வாங்கிக் கொள்கிறோம் பல நேரங்களில் கேட்பதில்லை. தாய் தனக்காக ஒரு போதும் இறைவனிடம் வேண்ட மாட்டாள். தன் பிள்ளை நல்லா இருக்க வேண்டும் எல்லா நன்மையும் பிள்ளைக்கு சேர வேண்டும் என்றும் சில சமயங்களில் தன் ஆயுளையும் சேர்த்து என் பிள்ளைக்கு கொடு இறைவா என்று கூட வேண்டுகிறாள். அது பிள்ளையாகிய நமக்கு அவளுடன் சேர்ந்திருக்கும் போது தெரிவதும் இல்லை புரிவதும் இல்லை. நமக்கு பல நண்பர்கள் வெளியே உருவாகிறார்கள் ஆனால் என்றும் நாம் ஒரு தாயை நண்பராகப் பார்ப்பதில்லை காரணம் ஒரு தாயிடம் எப்படி எல்லாத்தையும் சொல்லுவது என்ற பயம். நாம் எமது பிரச்சனைகளை நண்பர்களை நம்பிக் கதைகிறோமே ஆனால் பெற்ற தாயவளை நம்ப மறுக்கிறோமே காரணம் ஏனோ?.
என்று ஒரு தாயை நல்ல நண்பராகப் பார்கிறோமோ அன்று தான் நாம் நமது தாய்க்கு உண்மையாக இருக்கிறோம் என்று உணர்ந்து கொள்ள முடியும். எம்மை தாயவள் பெற்றாள் அவளே நம்மை வளர்கிறாள் நல்ல ஒரு பிள்ளையாக. அவ்வாறு இருக்க நாம் ஒரு பெண்ணைப் பார்க்கிறோம் காதலிக்கிறோம் என்று பயமில்லாமல் நண்பர்களிடம் சொல்கிறோம். அப்பொழுது ஒரு நண்பனால் உனக்கான இதில் உள்ள நன்மை தீமையைக் கதைக்க முடியாது காரணம் ஒரு வேளை நீ கோவித்து விடுவாயோ என்ற பயம் அல்லது அவன் உனது வயதாக இருப்பதால் கூட இருக்கலாம். ஆனால் பெற்ற தாயவள் உனக்கு நீ கூறிய மறு கணமே அதன் நமை தீமைகளைக் கூறி விடுவாள். இவ்வாறு இருக்கும் நம் தாயிடம் சொல்ல மறுக்கிறோம் பெற்ற தாய் எவ்வளவோ எதிர் பார்ப்புடன் இருப்பாள் என் பிள்ளை நான் சொல்லும் சொல்லைக் கேக்கும், நான் சொல்வதை மட்டுமே செய்யும் என்று ஆனால் பிள்ளைகளாகிய நாம் அதில் மண்ணை அள்ளிப் போடுகிறோம். காதலிப்பது தவறு என்று சொல்லவில்லை பெற்றவள் நிலை நமக்கு முதல் புரிய வேண்டும் அப்போது புரியும் நாம் காதல் செய்வது சரியா? தவறா? என்று. சில சமயங்களில் தாய் நமக்காக தன் படியில் இருந்து இறங்கி வருகிறாள் ஆனால் நாங்கள் அதை புரிவதில்லை. எமது குறிக்கோளை மட்டுமே மனதில் ஆணி அடித்தமாதிரி பதிந்து வைத்து விடுகிறோம் எமது நிலையில் இருந்து இறங்கி வருவதை மறுக்கிறோம். அச்சமயம் அத்தாயவள் ஒரு கணம் மனங்கலங்கி நிக்கும் போது கூட நாம் அவளின் அருமையைப் புரிவதில்லை.
ஒரு பறவையானது எவ்வளவு கஷ்டப்பட்டு தனது குஞ்சுகளுக்குத் தேவையான உணவுகளைத் தேடிச் சேமித்துவந்து உணவை ஊட்டுகிறதோ அது போல தாய் தனது பிள்ளைகளுக்கு தான் உண்ண உணவில்லா விட்டிலும் தன் பிள்ளைக்கு அதைக் கொடுத்துவிட்டு பட்டினி கிடக்கிறாள். நாம் நம் தாய் உணவருந்தி விட்டாளா என்று கூடக் கேட்ப்பதும் இல்லை கவனிப்பதும் இல்லை. அத்தருணத்தில் கூடத் தாயவள் கவலை கொள்வதில்லை தன் பிள்ளைகள் மன நிறைவுடன் சாப்பிட்டு விட்டார்கள் என்று சந்தோசப்படுகிறாள். அப்பொழுது கூட நாம் தாயின் அருமையைப் புரிந்து கொள்வதில்லை.
நாம் எமது நண்பர்களுடன் அரட்டையில் ஈடுபடும் போது நேரத்தைக் கவனிப்பதில்லை சில சமயங்களில் இரவாகி விட்டது கூடத்தெரியாமல் இருப்போம் அப்பொழுது வீடு திரும்பாத தன் பிள்ளை எங்கே போய் விட்டது? என்ன ஆயிற்று? அதாவது பிரச்சனையில் மாட்டி விட்டதா? என்று ஆயிரம் ஆயிரம் கேள்விகளைத் தன்னுள் எழுப்புகிறாள். தன் பிள்ளையின் வரவை எதிர் பார்த்து "குட்டி போட்ட நாய் போல " வாசலைப் பார்த்த படி நடந்து திரிவாள். அவளின் பிள்ளை அவள் கண்ணில்ப் படும் வரை அவள் நிம்மதியை இழந்து விடுகிறாள். அப்பொழுது நாம் என் தாயவள் என்னை எதிர் பாத்துத் தான் காத்திருக்கிறாள் என்று கூடப் புரியாமல் வீட்டினுள் சென்று நமது வேளையில் ஈடு படுகிறோம். தன் பிள்ளையைப் பேசினால் பிள்ளைமனம் பாதித்திவிடுமோ என்று தயங்குவாள். ஒரு தாய் தன் பிள்ளையை பிரிந்தது முதல் அப் பிள்ளை மீண்டும் அவளை அடையும் வரை எத்தனை வேண்டுதல்கள் விரதங்கள் பிடிக்கிறாள். இவ்வாறான பெற்ற தாயினது அருமைகளை பிள்ளைகளாகிய நாம் ஏன் புரிந்து கொள்வதில்லை?.
பெற்றதாயின் அருமை புரிந்த ஒரு பிள்ளையின் வார்த்தைகள்....... (தளவாடி தினேஷ்)