Tuesday, 19 October 2010

பனங் கொட்டை மூக்கினுள் சென்ற கதை

ஒர் அழகிய கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவனிடம் இரண்டு ஜோடி மாடுகள் இருந்தன அவற்றை மிக அன்போடு வளர்த்து வந்தான். அத்துடன் அவற்றைக் கொண்டே உழுது விவசாயமும் செய்து வாழ்ந்து வந்தான் இவ்வாறு சில காலங்கள் கழிந்தன. ஒரு நாள் இவன் தனது விவசாயத்தை முடித்துவிட்டு வீட்டிற்க்கு திரும்பும் அவசரத்தில் அவனது மாடு இரண்டயும் வடிவாகக்கட்டவில்லை. அடுத்த நாள் அதிகாலை அவன் விவசாயத்திற்கு செல்வதற்க்காக மாட்டினை அவிழ்க்கச் சென்றான் ஆனால் அங்கே அவன் மாட்டைக் காணவில்லை. சிறிது நேரம் யோசித்தான் திருடி விட்டார்களோ! என்று பின்னர் ஒரு சில நேரம் கழிந்த பின் அவனது நினைவுக்கு எட்டியது நேற்று வீடு செல்லும் அவசரத்தில் மாட்டினை ஒழுங்காககட்டவில்லை என்று, அந்த நொடிப்பொழுதிலிருந்து
மாட்டினைத் தேட ஆரம்பித்தான் மூன்று நாட்க்கள் கழிந்தன அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.


நான்காம் நாளும் ஆரம்பித்தது.. அவன் தன்னுடன் தனக்கு சாப்பாட்டினையும் எடுத்து சென்றான். வெகு தூரம் சென்றான் அவனிற்கு களைப்பு ஏற்ப்பட்டது அப்போது அவன் நின்ற இடத்திற்கு அருகாமையில் ஒரு குளம் இருந்தது அதன் அருகே தனது உணவினை வைத்து விட்டு அக் குளத்தினுள் நீராட சென்றான்.







பின்னர் அவன் உணவை உண்பதற்காக ஒரு பனை மரத்தின் நிழலில் உர்க்காந்து உணவை உண்ண ஆரம்பித்தான். சில வினாடிகள் கழித்து அவனிற்கு ஒருவர் கதைக்கும் சத்தம் கேட்டது சுற்றிப் பார்த்தான் அங்கு யாரும் இல்லை. அப்பொழுது அந்த விவசாயி கேட்டான் "கதைப்பது யார்?" என்று அந்த குரல் சொன்னது "உன்னருகே கீழே பார்" என்றது அவன் கீழே பார்த்ததும் அதிசயித்து போனான்.



காரணம் அவன் கீழே கண்டது ஒரு பனங்கொட்டையை அது அந்த ஏழை விவசாயிற்கு சொன்னது "நீ என்னை உன்னுடன் எடுத்து சென்றால் உனது மாடுகள் எங்கே நிக்கிறது என்று காட்டித்தருகிறேன்" என்றது அப்போது அந்த விவசாயி யோசித்தான் இந்தப் பனங் கொட்டைக்கு எவ்வாறு நான் மாட்டைத் தேடி வந்தது தெரியும் என்று. உடனே அவன் உண்பதை நிறுத்திவிட்டு அப் பனங் கொட்டையை ஒரு நொடிப்பொழுதும் தாமதியாமல் தன்னுடன் எடுத்துச் சென்றான். அந்தப்பனங் கொட்டையும் அவனுக்கு வழி காட்டிக் கொண்டு சென்றது இறுதியில் ஒரு வீட்டினைக் காட்டி இங்கே தான் உனது மாடுகள் உள்ளன என்று கூற அவ் ஏழை விவசாயி ஆவலுடன் அந்த வீட்டினுள் நுழைந்த போது அவன் தனது மாடுகளைக் கண்டான்.




பின்னர் இம் மாடுகள் தனது மாடுகள்அந்த வீட்டுக்காரரிடம் உறுதி செய்தான். ஆனால் அங்கே இருந்தது ஒரு கோபமும் ஆசையும் அதிகம் கொண்ட பெண். (ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே) அவளோ அவனை ஏசி தரமுடியாது என்று கூறி வெளியே கலைத்தாள் அவ் விவசாயிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை பொழுதும் சாய்ந்து விட்டது. நீண்ட நேரமாக யோசித்து விட்டு அப்படியே ஓரிடத்தில் உறங்கிவிட்டான். அதிகாலை விடிவதற்கு முன் அவனது நண்பனான பனங்கொட்டை அவனை எழுப்பி அமைதியாக சென்று உனது மாட்டினை அவிழ்த்து வா என்று கூறி அனுப்பியது. அவனும் மாட்டினை அவிழ்த்துக் கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். அதே சமயம் இவன் மாட்டை அவிழ்த்ததை கண்ட அந்தப் பெண்ணின் மகள் அவளிடம் கூற அவ் விவசாயினை பின் தொடர்ந்தாள். அவன் பனந் தோப்புகள் நிறைந்த இடம் ஒன்றை அண்மித்ததும் அப் பெண் அவனை நெருங்கி விட்டாள்.



உடனே அவனைக் காப்பற்றுவதர்க்காக பனங்கொட்டை அவனிடம் கூறியது "நீ என்னை ஒரு பனை மரத்தின் கீழ்வைத்து விட்டு மாட்டை அருகே கட்டிவிட்டு பனை மரத்தின் மேல் ஏறு". என்றது அவனும் அவ்வாறே செய்தான். அவன் மீது கோபம் கொண்ட அப்பெண் அவனைப் பிடிப்பதற்காக அவன் ஏறிய பனைக்கு அருகில் சென்று அதன் மேல் ஏற ஆரம்பித்தாள். சிறிது உயரம் ஏறியதும் அவளைத் தொடர்ந்து வந்த அவளின் மகளும் ஏறினாள் ஏறும் போது கீழே இருந்த பனங் கொட்டையானது மகளின் காலைக் கடிக்கத் தொடங்கியது அதனால் மகள் தாயாகிய அப்பெண்ணின் காலைப் பிடித்து ஏற முயற்சித்த போது ஆத்திரம் அடைந்த அப்பெண் தனது காலால் உதைந்தாள். அதன்போது அவளின் மகள் கீழே விழுந்து இறந்துவிட்டாள். அதையும் கவனியாது தொடர்ந்து ஏற ஆரம்பித்தாள் அப்பெண். அப்போது கீழே இருந்த பனங்கொட்டை அவனது நண்பனாகிய அவ் ஏழை விவசாயிக்கு சொன்னது மேலே இருக்கும் கள்ளு அனைத்தையும் அப்படியே எடுத்து பனைமரத்தின் கீழ் அவள் ஏறும் பகுதியில் ஊத்துமாறு அவனும் அவ்வாறே செய்ய அப்பெண்ணும் கீழே விழுந்து இறந்துவிட்டாள். அவ் விவசாயி பனை மரத்திலிருந்து கீழே இறங்கி அப் பனங்கொட்டைக்கு நன்றி கூறி விட்டு மாட்டையும் கொண்டு வீடு சென்றான். சில நாட்கள் கழித்து அப் பனந்தோப்பு அருகால் அரச மண்டபத்தில் பணியாற்றுபவர்கள் அதிகாலைப் பொழுதில் வந்த பொழுது ஒரு குரல் தேவாரம் திருவாசகம் பாடுவதைக் கேட்டனர். என்ன என்று பார்த்த போது அது ஒரு பனங் கொட்டை அதிசயித்துப் போனார்கள் உடனே அத்தகவலை மன்னருக்கு அறிவித்தனனர் மன்னரும் அப் பனங்கொட்டையை அரச மண்டபத்திற்கு எடுத்து வருமாறு உத்தரவிட்டார்.




அரச காவலாளிகள் அதனை எடுத்து வந்து மன்னரிடம் கொடுத்தனர். அப்பொழுது அப் பனங் கொட்டையானது மன்னன் அதை மணக்கும் போது மூக்கினுள் சென்று விட்டது. அதை எடுப்பதற்கு வைத்தியர் முதல் பலர் முயற்சித்தனர் அது வருவதாக இல்லை உடனே மன்னன் அறிவித்தான் தனது மூக்கினுள் சென்ற பனங் கொட்டையை எடுப்பவருக்கு பொற்காசுகள் அளிக்கப்படும் என்றும் அவ்வாறு இல்லாவிட்டால் தண்டனை வழங்கப்படும் என்று இருந்தும் இருவர் முயற்சித்தனர் அவர்களின் முயற்சி தோற்றுப் போனது பின் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. இச் செய்தியை அறிந்த பனங் கொட்டையின் நண்பனாகியே விவசாயி அறிந்தான் அவன் அவைக்குச் சென்றான். அங்கு இருந்தவர்கள் அவனிடம் விதிகளைச் சொன்னார்கள். அவன் அரசன் அருகே சென்று மூக்கின் அருகே கையை கொண்டு சென்று "நண்பனே வா" என்றான் உடனே அவனது கையை அடைந்தது அப் பனங் கொட்டை பின்னர் மன்னன் அவனைப் பாராட்டி அவனுக்கு பொற்காசுகளை வழங்கி அனுப்பி வைத்தார் .

"நாம் எதையும் அன்போடு பார்த்தால் அது நமக்கு நன்மையே அளிக்கும் அது உயிராக இருந்தாலும் சரி உயிர் அற்றதாக இருந்தாலும் சரி".


இது ஒரு கற்பனைக் கதை. இக் கதை நான் 10 வருடங்களுக்கு முன்னர் அதாவது 2000 ஆம் ஆண்டளவில் எனது அப்பாவின் நண்பர் கூறியது எனக்கு ஞாபகம் இருந்ததால் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

இக்கதை பிடித்திருந்தால் உங்கள் உள்ளத்தில் இருப்பதை ஒரு முறை வரைந்து விட்டு செல்லுங்களேன்..

No comments:

Post a Comment